நேப்பியர் : ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதற்குக் காரணம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டு சதம் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அபார ஆட்டம் என கலக்கியதால் மிட்செலை நம்பி சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக டேரல் மிச்சல் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் ஏலத்துக்குப் பின்பு டேரல் மிட்செல் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நேப்பியரில் நடைபெற்றது. இதில் டேல் மிட்செல் களமிறங்கினார். 14 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட புது சிஎஸ்கே வீரர் எப்படி செயல்பட போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்த நிலையில் அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் பின் ஆலன் ஒரு ரன்னில் வெளியேறினர். இதேபோன்று கிளன் பிலிப்ஸ் டக் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி ஒரு ரன் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில் டாரல் மிட்செல் எப்படி விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
மூன்றாவது வீரராக களம் இறங்கிய டாரல் மிட்செல் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இதனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எனினும் சுழற் பந்துவீச்சாளர் மகதி ஹசன் பந்தை எதிர்கொண்ட டாரல் மிட்செல் கிளீன் போல்ட் ஆனார். இதன் மூலம் 15 பந்துகளில் அவர் வெறும் 14 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார்.
அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் 48 ரன்களிலும் மற்றொரு சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 22 பந்துகளில் 23 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. டாரல் மிச்செல் இன்றைய ஆட்டத்தில் சொதப்பினாலும், அடுத்த போட்டியிலாவது சிறப்பாக விளையாடி தன்னுடைய ஃபார்மை அவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.