சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்பது தொடர்பான முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் தோனி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனின் முடிவிலேயே என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி கூறியிருந்தார். அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டதோடு, ஹேர் ஸ்டைலையும் மாற்றி விண்டேஜ் லுக்கிற்கு மாற்றமடைந்துள்ளார். அறிமுக காலத்தில் இருந்த ஹேர் ஸ்டைலில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து தோனி களமிறங்குவதை பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமை பார்க்க ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்திலும், "ஆரம்பிக்கலாங்களா?" என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் இன்று முதல் சென்னை வரவுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனால் புதிதாக இணைந்துள்ள இளம் வீரர்கள் பலரையும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அடுத்த வாரத்தில் சென்னை வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மீண்டும் அதே ஃபிட்னஸ் உடன் கடைசி முறையாக தோனி சிஎஸ்கே அணிக்காக களமிறங்க உள்ளதால், அவரின் வருகையே ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சி முகாமில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.