சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு பிசிசிஐ அழைத்து பேசியதாக கூறப்பட்ட விவகாரத்தில் சிஎஸ்கே-வின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பம் கோரியுள்ளது. 2024 டி20 உலக கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் என கூறப்படும் நிலையிலக் வேறு பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ.

இந்த பதவிக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், பிசிசிஐ அதிகாரிகள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஸ்டீபன் பிளெம்மிங்-இடம் பேசியதாக கூறப்படுகிறது. அவர் சிஎஸ்கே அணியை 16 ஆண்டுகள் திறம்பட வழி நடத்தி இருக்கிறார். எனவே அனுபவம் வாய்ந்த அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்து இருந்ததாகவும், அவர் உடனடியாக பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த செய்தி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு முக்கிய விஷயத்தை கூறியிருக்கிறார். அது குறித்து பேசுகையில், "இது போன்ற எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. ஸ்டீபன் பிளெம்மிங் இடமிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த தகவலும் சொல்லப்படவும் இல்லை. அதேபோல சிஎஸ்கே அணி நிர்வாகமும் பிளெம்மிங்-இடம் இது குறித்து எதுவும் பேசவும் இல்லை" எனக் கூறி இருக்கிறார்.
இதன் மூலம் ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே அணியை விட்டு செல்ல மாட்டார் என தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் யாரேனும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.