தோனியின் கிரிக்கெட் வாழ்வில் இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்
தரம்சாலா : 2024 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற இருக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி தனது கிரிக்கெட் வாழ்விலேயே இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை தற்போது செய்து இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது அவர் ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கினார். அவருடைய டி20 கிரிக்கெட் வாழ்வில் இதுவரை மூன்றாம் வரிசையில் இருந்து எட்டாம் வரிசை வரை பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதில் சோகம் என்னவென்றால் இந்தப் போட்டியில் தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த போட்டியில் முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது சிஎஸ்கே அணி விரைவாக விக்கெட்களை இழந்த நிலையில் தோனி ஏழு அல்லது எட்டாவது வரிசையில் பேட்டிங் இறங்குவார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அவர் அப்போது பேட்டிங் இறங்கவில்லை. மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் போன்ற பந்து வீச்சாளர்கள் தான் ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கினர். பின் ஒன்பதாவது வரிசையில்தான் பேட்டிங் செய்ய வந்தார் தோனி. அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரால் தொடர்ந்து ரன் ஓட முடியாது என கூறப்படுகிறது. அதனால் 19வது ஓவரில் தான் தோனி களமிறங்கினார். அவர் வழக்கம் போல கடைசி ஓவரில் சிக்ஸர்களாக அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்த பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி விரைவாக விக்கெட்களை இழந்த நிலையில் சேஸிங் செய்ய முடியாமல் 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications