சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 42 வயதான தோனி, தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து தற்போது சாதாரண வீரராக தான் விளையாட போகிறார்.
இந்த நிலையில் அடுத்த கேப்டனாக ஜடேஜா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாய்ப்பு ருத்ராஜுக்கு கிடைத்திருக்கிறது. ஜடேஜா தன்னுடைய வாழ்க்கையில் கேப்டனாகவே இருந்தது இல்லை. ஆனால் ருதுராஜ் அப்படி கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் ருதுராஜ்க்கு இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 27 வயதான ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக 52 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் 1797 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் ஏழாவது இடத்தில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 2021 வது ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ருதுராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அணியின் டி20 மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் அலி தொடரில் ருதுராஜ் 5 போட்டிகளில் 259 ரன்களை கேப்டனாக அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 51 ஆகும். இந்த தொடரில் அவர் மூன்று அரை சதம் அடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 2021- 22 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கேப்டனாக தலைமை தாங்கி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.
அந்தத் தொடரில் ருதுராஜ் தொடர்ந்து நான்கு சதம் அடித்து 600 ரன்கள் மேல் குவித்தார். இதன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தால் விராட் கோலியின் சாதனையை ருதுராஜ் ம் சமன் செய்தார். இதேபோன்று நவம்பர் 2022 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே தொடரில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான காலிறுதியில் இரட்டை சதம் அடித்தார். மேலும் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.
இது மட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக இருந்து இரண்டு போட்டிகளில் 77 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் மூன்று டி20 போட்டிகளில் ருதுராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் இரண்டாவது டி20 போட்டியில் 58 ரன்ளும் மூன்றாவது t20 போட்டியில் 57 பந்துகளில் 123 ரன்கள் ருதுராஜ் குவித்தார். இப்படி கேப்டன், துணை கேப்டன் என பல்வேறு பொறுப்புகளை ருதுராஜ் வகித்திருப்பதால் சிஎஸ்கேவுக்கு அவர் சரியான தேர்வாக இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.