நேப்பியர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இல்லாததுதான். சிஎஸ்கே அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கை அணியின் மகிஷா பதிராணா.
இந்த நிலையில் அவரை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த சீசனையும் விளையாடுவது மிகவும் ஆபத்தாகும். இதனால் கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை சிஎஸ்கே அணி தேடும் பணியில் இருந்தது. அப்போதுதான் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சேவை எடுத்துவிடலாம் என நினைத்தது.

ஆனால் அவருடைய விலை அதிகமாக சென்றதால் மும்பை அணி ஏலத்தில் எடுத்து விட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே யாரை தான் வாங்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு எடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது, சிஎஸ்கே அணி நிர்வாகம்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ்மான் முதலில் புயல் போல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தாலும் சமீப காலமாக சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. இதனால் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் சில சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் தோனி ஒரு வீரரை தேர்வு செய்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கும் என்பது இன்று மீண்டும் தெளிவாகி இருக்கிறது.
காரணம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கிய முஸ்தபிசூர் ரஹ்மான் அபாரமாக பந்து வீசி நியூசிலாந்து பேட்டிங்கை சிதறடித்தார். வெறும் நான்கு ஓவர் மட்டுமே வீசிய முஸ்தபிசூர் ரஹ்மான் 15 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
மேலும் முஸ்தபிசூர் ரஹ்மான் வீழ்த்திய இரண்டு விக்கெட்டையுமே முக்கியமானதாகும். முஸ்தபிசூர் ரஹ்மானின் இந்த பந்துவீச்சை பார்த்து நல்லவேளை சிஎஸ்கே அணி கடைசி கட்டத்தில் இவரை வாங்கி விட்டது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பதிராணா உடன் முஸ்தபிசூர் ரஹ்மானும் இணைந்து பந்து வீசினால் சிஎஸ்கே வின் வேகப்பந்து வீச்சு பல மடங்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.