சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டெவோன் கான்வேவின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் நடக்கும் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார்.

அதேபோல் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமும் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடும் வீரர்களை தவிர்த்து அனைவரும் சிஎஸ்கே பயிற்சி முகாமில் மார்ச் முதல் வாரத்திலேயே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிஎஸ்கே அணியின் பல்வேறு வீரர்களும் காயமடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிவம் துபே, டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் காயம் காரணமாக சிகிச்சையில் இருந்தனர். இதுமட்டுமல்லாமல் முகேஷ் சவுத்ரி, ருதுராஜ் உள்ளிட்டோரும் காயத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரரான டெவோன் கான்வே-யும் காயத்தில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த போது, கான்வேயின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.
தொடக்கத்தில் சாதாரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு முழு விவரங்கள் தெரிய வந்துள்ளது. கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் கைகளால் பேட்டை தூக்கிய போது, கட்டை விரலில் காயம் அவருக்கு பிரச்சனையை கொடுத்துள்ளது. இதனால் கான்வேவின் காயம் குணமடைய சில வாரங்களாகும் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இருந்த டூ பிளஸிஸ் ஆர்சிபி அணிக்கு சென்ற பின், டெவோன் கான்வே அவரின் இடத்தை நிரப்பினார். கடந்த 2 ஆண்டுகளில் 23 போட்டிகளில் 924 ரன்களை விளாசியுள்ளார். ஸ்பின்னர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை சரிக்கு சமமாக விளாசும் கான்வே இல்லாமல் சிஎஸ்கே அணி களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் கலங்கி போயுள்ளனர்.