எல்லாம் சிஎஸ்கே வாங்கிய நேரம்.. டெஸ்டிலும் முதல் சதம் அடித்த ரச்சின்.. இதே ஃபார்மில் வந்துரு ராஜா!
ஹாமில்டன் : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா தனது முதல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் எஸ்ஏ20 லீக்கில் பிஸியாக இருப்பதால், அறிமுக வீரர் நெய்ல் பிராண்ட் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி பயணம் செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து டாம் லேதம் - டெவோன் கான்வே கூட்டணி களமிறங்கியது. இதில் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் லேதம் - வில்லியம்சன் கூட்டணி இணைந்தது. நிதானமாக ஆடிய லேதம் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழலில், ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடினர். நீண்ட நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ள வில்லியம்சன், 143 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடக்க, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் இளம் பவுலர்கள் எவ்வளவு முயன்று இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு சொந்த மண்ணில் அடிக்கும் 17வது சதமாகும். பின்னர் அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இறுதியாக நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 118 ரன்களையும், கேன் வில்லியம்சன் 112 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு பின் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ள ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக உயர்ந்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள அவருக்கு, இதே பேட்டிங் ஃபார்முடன் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications