sameer rizvi : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டில் சமீர் ரிஸ்வி என்ற 20 வயதான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வீரரை 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
சிஎஸ்கே அணியில் இருந்த அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு மாற்றாக இவர் இருப்பார் என சிஎஸ்கே அணி நம்பியது. இந்த நிலையில் சமீர் ரிஸ்வி சிஎஸ்கே வைத்த நம்பிக்கையை கொஞ்சம் கூட வீணடிக்கவில்லை. 22 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி கே நாயுடு கோப்பையில் சமீர் ரிஸ்வி அபாரமாக விளையாடி வருகிறார்.

சௌராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சமீர் ரிஷ்வி முதல் இன்னிங்ஸில் முச்சதம் அடித்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய அவர் 266 பந்துகளை எதிர் கொண்டு 312 ரன்களை குவித்தார். இதில் 33 பவுண்டரிகளும் 12 இமாலய சிக்சர்களும் அடங்கும்.
இந்த நிலையில் சௌராஷ்டிரா அணி மீண்டும் பேட்டிங் செய்தது. அவர்கள் 80 ஓவர்களை எதிர்கொண்டு 249 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் உத்தரபிரதேச அணி மீண்டும் பேட்டிங் செய்தது. அப்போது பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி பட்டையை கிளப்பினார்.
முதலில் முச்சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் சாதனை படைத்தார். ஐந்து இமாலய சிக்சர், ஒரு பவுண்டரி என பட்டையை கிளப்பிய சமீர் ரிஸ்வி 36 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் கூடுதல் ரன்கள் அடித்த உத்தர பிரதேச அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சமீர் ரிஸ்வி தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவதால் அவருக்கு முதல் போட்டியில் இருந்து தோனி சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஎஸ்கேவில் விளையாடி பல வீரர்கள் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அந்தப் பட்டியலில் சமீர் ரிஸ்வியும் இடம் பெறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.