சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கே கே ஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா அபாரமாக பந்து வீசி விக்கெட் வேட்டையை நடத்தி வருகிறார்.
சிஎஸ்கே அணியின் மிகவும் பலம் வாய்ந்த வீரராக இருப்பது ஜடேஜா தான் பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என மூன்றிலுமே ஜடேஜா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவார். ஆனால் கடந்த சில காலமாக ஜடஜாவின் பேட்டிங்கும் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. இதனால் சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறி வந்தது.

இந்த நிலையில் நடப்பு சீசனில் ஜடேஜா சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஜடேஜா ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். பந்துவீச்சு இப்படி என்றால் பேட்டிங்கிளும் 25, 7, 21, 31 ஆகிய ரன்களை தான் ஜடேஜா அடித்திருந்தார்.
இதனால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதால் தான் ஜடேஜா இப்படி விளையாடுகிறார் என்று ரசிகர்களும் பேசத் தொடங்கினர்.இந்த நிலையில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஜடேஜா இன்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கே கே ஆர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது. குறிப்பாக இலங்கை வீரர் தீக்சனா ஓவரில் சுனில் நரேன், 19 ரன்கள் எடுத்திருந்தார்.
குறிப்பாக பவர் பிளே முடிவில் கே கே ஆர் அணி 56 ரன்களை குவித்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் 200 ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி கே கே ஆர் அணியை நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறார்.
கேகேஆர் அணியில் சுனில் நரைன் மற்றும் ஆங்கிரிஸ் ரகுவான்சி ஆகியோர் அபாரமாக விளையாடி வந்தனர். ஆனால் ஜடேஜா ஒரே ஓவரில் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கே கே ஆர்க்கு அதிர்ச்சி அளித்தார்.
இதேபோன்று தன்னுடைய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கே கே ஆர் அணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய தமிழக வீரர் வெங்கடேஸ் ஐயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் 8 பந்துகளில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இதனால் 56 ரன்னுக்கு ஒரு விக்கெட் என இருந்த கேகேஆர் அணி 64 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.