சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை பிசிசிஐ ரகசியமாக அழைத்துப் பேசி இருப்பது சிஎஸ்கே அணி நிர்வாகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வருகிறது. அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ கூறியுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சரியான நபர் எனக் கருதி உள்ளனர். எனவே, அவரை அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைத்து பேசியுள்ளனர். இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் அணி மற்றும் டி20 அணிகளின் பயிற்சியாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே அணி உட்பட நான்கு டி20 அணிகளின் பயிற்சியாளராக இருக்கிறார். அந்த பதவிகளை விட்டு விட்டு இந்திய அணி பயிற்சியாளராக வர ஒப்புக் கொள்வாரா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
2008இல் சிஎஸ்கே அணியில் ஒரு வீரராக இடம் பெற்று, பின் 2009 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு இருக்கிறார் பிளெம்மிங். சிஎஸ்கே அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்திருக்கிறார். அவருக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். இதை அடுத்து அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணி பெரிய சிக்கலில் இருந்து தப்பி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் ஆணி வேரான தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற இருப்பதால் சிஎஸ்கே அணி முக்கியமான கட்டத்தில் உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி ஒரு முறையாவது ஐபிஎல் கோப்பை வென்றால் மட்டுமே தோனி பெற்றுக் கொடுத்த பெயரையும், ரசிகர்களையும் அந்த அணி தக்க வைத்துக் கொள்ள முடியும். இத்தனை காலம் சிஎஸ்கே அணியை கட்டமைத்து, பாதுகாத்து வந்த பயிற்சியாளர் பிளெம்மிங் சிஎஸ்கே அணியில் அடுத்த மூன்று ஆண்டுகள் இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் சிஎஸ்கே அணியை உடைக்கப் பார்த்த பிசிசிஐ-யின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.