அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணமே அஜின்க்யா ரஹானே தான் என சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், அவரை சிஎஸ்கே அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டி நடந்த பிட்ச் பேட்டரி செய்ய சாதகமானது என்பதால் இரு அணிகளும் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்தன.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மிக எளிதாக 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணியை சிதறவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் பந்து வீச்சு படு சொதப்பலாக இருந்தது.
எனினும் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு இந்த இலக்கை எட்டி வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கு வேட்டு வைத்தார் அஜின்க்யா ரஹானே. முதல் ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திராவை ரன் அவுட் செய்ய காரணமாக இருந்தார். ரஹானே ஒரு ரன் ஓடி வர சொன்னதால் ரச்சின் ரவீந்திரா வேகமாக ஒரு ரன் ஓடினார்.
ஆனால் டேவிட் மில்லர் எறிந்த துல்லியமான த்ரோவால் ரச்சின் ரவீந்திரா ரன் அவுட் ஆனார். அவரை ரன் அவுட் செய்த பின் அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரஹானே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதை அடுத்து சிஎஸ்கே அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்தால் அவரும் விக்கெட்டை இழந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் சிஎஸ்கே அணி திணறியது. டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயீன் அலி 56 ரன்களும் எடுத்தனர். எனினும் இலக்கு பெரிதாக இருந்ததால் சிஎஸ்கே அணியால் கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆட முடியாமல் தோல்வியடைந்தது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் சரிவை துவக்கி வைத்த ரஹானே தான். இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அவர்தான் என ரசிகர்கள் கோபமாக கூறி வருகின்றனர். சிஎஸ்கே அணியை விட்டு ரஹானேவை நீக்க வேண்டும், அவருக்கு பதிலாக சமீர் ரிஸ்வி அல்லது வேறு ஒரு இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.