சென்னை : சிஎஸ்கே அணிக்காக பவுலிங் செய்யும் போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி இருவரிடமும் ஆலோசனைக்காக திரும்பி பார்ப்பதாக இளம் வீரர் தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்துள்ளார் தீபக் சஹர். சேப்பாக்கம் மைதானத்தில் 207 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ய வேண்டுமென்றால், அதற்கு டாப் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர் இன்னிங்ஸ் முழுக்க விளையாட வேண்டும்.

அந்த பொறுப்பை முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சுப்மன் கில் எடுத்து கொண்டார். அவர் எவ்வளவு நேரம் க்ரீஸில் இருக்கிறாரோ, அவ்வளவு நேரமும் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் எந்தவொரு பவுலரையும் எளிதாக விளாசக் கூடிய அபாயகரமான பேட்ஸ்மேன் சுப்மன் கில். இவரை 8 ரன்களிலேயே தீபக் சஹர் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
அதேபோல் பவர் பிளே ஓவர் முடிவதற்கு அதிரடியாக ரன்களை குவித்த சாஹாவையும் 21 ரன்களில் வீழ்த்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் தீபக் சஹர். அதுமட்டுமல்லாமல் வீசிய 24 பந்துகளில் 11 பந்துகள் டாட் பால். அந்த டாட் பால் தான் குஜராத் அணி பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சஹர் பேசுகையில், சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது எப்போதும் பவர் பிளேவில் குறைந்தபட்சம் 3 ஓவர்களையாவது வீசிவிடுவேன். அது கொஞ்சம் கடினமான ஒன்று தான். ஆனால் அணி நிர்வாகம் தரப்பில் என்னுடைய ரோல் அது தான். நானும் பவர் பிளேவில் பவுலிங் செய்து முயற்சிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதேபோல் இந்த சீசனில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சரிகள் வீசலாம் என்று புதிய விதி பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக உள்ளது.
ஏனென்றால் முன்னதாக ஒரு பவுன்சரை வீசினால், அடுத்த பந்திற்கு ஃபுல் லெந்த் பந்து வரும் என்று கணித்து பேட்ஸ்மேன்கள் தயாராக இருப்பார்கள். ஆனால் இப்போது பேட்ஸ்மேன்கள் எந்த பந்து வரும் என்று குழப்பமடைகிறார்கள். 2வது பவுன்சர் வீசப்பட்டால் என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதும் பவுன்ஸ் நன்றாகவே கிடைக்கும். ஆனால் கொஞ்சம் ஸ்லோயர் விக்கெட்டாக இருக்கும். தற்போது அதிகளவு பனிப்பொழிவு இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தோனிக்கு பதிலாக புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் பேசி ஆலோசிப்பது குறித்த கேள்விக்கு, நான் இப்போதும் இருவரின் பக்கமும் ஆலோசகனைக்காக திரும்பி பார்க்கிறேன். சில நேரங்களில் எந்த பக்கம் பார்ப்பதே என்று குழப்பி கொள்கிறேன். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் எங்களை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் என்று கூறியுள்ளார்.