சென்னை : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் 18 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களால் வீசப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 207 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி உச்சத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி புதிய கேப்டனுக்கு கீழ் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனியை பின்பற்றாமல் தனக்கென்று ஒரு பாணியிலான கேப்டன்சியை உருவாக்கி வருவதையும் உணர முடிகிறது. வழக்கமாக சேப்பாக்கம் மைதானத்தில் தோனி 3 ஸ்பின்னர்கள் இல்லாமல் களமிறங்க மாட்டார்.
கடந்த சில சீசன்களில் ஜடேஜா, மொயின் அலி மற்றும் தீக்சனா ஆகியோர் இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடியதே இல்லை. ஆனால் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 18 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களும், 2 ஓவர்களை மட்டும் ஸ்பின்னர்களும் வீசியுள்ளனர். ஏற்கனவே ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் 12 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களும், 8 ஓவர்களை ஸ்பின்னர்களும் வீசினார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஸ்பின்னர்கள் இல்லாமல் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முழுமையாக வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியை பெற்றுள்ளார். இதற்கு பின் 2 முக்கிய காரணங்கள் அமைந்துள்ளது. ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்று புதிய விதிமுறை தைரியமாக வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் முடிவை எடுக்க வைத்துள்ளது.
அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்சில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருப்பதும் முக்கிய காரணம். கடந்த சில ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தின் பிட்சில் கறுப்பு மணல் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், தற்போது சிவப்பு மணல் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனை புரிந்து ருதுராஜ் கெய்க்வாட் 18 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து வீசியுள்ளார்.
டேவிட் மில்லர் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகிய 2 இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், ஜடேஜாவுக்கு ஓவர்கள் கொடுக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் தோனியை பின்பற்றாமல் புதிய விதிகள் மற்றும் பிட்சை கணித்து வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் காட்டி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.