சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை வெள்ளிக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் மாலை 7:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சில மாற்றங்களை செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிஎஸ்கே அணி பேட்டிங் நடு வரிசையில் சில சிக்கல்கள் இருக்கின்றது.
சிவம் துபேவை தவிர மற்ற வீரர்கள் யாரும் அதிரடியாக விளையாடுவதில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனி ஹர்ட்ரிக் சிக்ஸர் அடித்து நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இதனால் பலரும் தோனியை பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கும். இதன் காரணமாக தோனி நாளைய போட்டியில் பேட்டிங் வரிசையில் முன்னரே களமிறங்க கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தோனி தற்போது நல்ல உடல் தகுதியுடனும், ஃபார்முலுடன் இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

தோனி நடுவரிசையில் களமிறங்கினால் சிஎஸ்கே அணி எடுக்கும் ஸ்கோரை விட கூடுதலாக 20, 30 ரன்கள் சேர்க்க வாய்ப்பு இருப்பதால் இந்த மாற்றம் நடக்க இருக்கின்றது. இது தொடர்பாக அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்திருப்பதாகவும் இனிவரும் போட்டிகளில் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தோனி நடுவரிசையில் களமிறங்க கூடும் என்று தெரிகிறது.
வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் வகையில் தோனியில் பேட்டிங் வரிசை மாறுபடலாம். சிவம் துபே களத்தில் இருக்கும் போது தோனி ஐந்தாவது வீரராக களத்திற்கு வரலாம் என தெரிகிறது. தோனி இந்த மாற்றத்தை செய்தால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.