மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 42 வயதான மகேந்திர சிங் தோனி தொடர்ந்து பட்டையை கிளப்பி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நான்கு பந்துகளில் ஹட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்கள் சேர்த்தார்.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தடுமாறியபோது தோனி 9 பந்துகளை எதிர் கொண்டு 28 ரன்களை விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகளும்,இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 311 என்ற அளவில் இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி அபாரமாக விளையாடி வருகிறார். இதேபோன்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இப்படி தோனி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதால் அவரை டி20 உலக கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பராக டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் இந்திய அணியில் இருந்தால் நிச்சயம் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே ரோகித் சர்மாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடினார். அவருடைய ஆட்டம் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் தோனியை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க சொல்லி ஒப்புக் கொள்ள வைக்க முடியாது" என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். இதனால் ரோகித் சர்மா மனதிலும் தோனி டி20 உலக கோப்பையில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் நிச்சயம் இருக்கிறது.
இந்த நிலையில் உலக கோப்பையை இந்திய அணி வென்று பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் டி20 உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்பதால் பிசிசிஐ தோனியிடம் பேசி t20 உலக கோப்பைக்கு வர வைக்கலாம் என்றும் பேச்சு அடிப்படுகிறது. அப்படி நடந்தால் நிச்சயம் அதைவிட பெரிய மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இல்லை. ஆனால் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தான் முடிவு எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.