சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சமீர் ரிஸ்வி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பொதுவாக சிஎஸ்கே அணி ஒரு இளைஞரை தேர்வு செய்தால் அவர்களுக்கு வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கொடுக்காது.
சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத், ராஜவர்த்தன் ஹங்கேர்கர், நிசாந்த் சிந்து போன்ற வீரர்கள் எல்லாம் இன்னும் வாய்ப்புக்காக காத்து கிடக்கின்றனர். ஆனால் சமீர் ரிஸ்வி தேர்வு செய்யப்பட்ட முதல் சீசனில் முதல் போட்டியில் இருந்தே அணியில் இருக்கிறார்.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி உள்ள சமீர் ரிஸ்வி, மூன்று முறை தான் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் டெல்லி அணிக்கு எதிராக டக் அவுட்டும், லக்னோ அணிக்கு எதிராக கடந்த போட்டியில் 1 ரன் மட்டுமே ரிஸ்வி எடுத்தார். சமீர் ரிஸ்வி மீது சிஎஸ்கே பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.
சென்னை அணியின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக சமீர் ரிஸ்வி விளங்குவார் என்று தோனி நம்புகிறார். இந்த நிலையில் சமீர் ரிஸ்விக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி சமீர் ரிஸ்வி பேட்டிங் வரிசையில் இன்றைய ஆட்டத்தில் இருந்து கொஞ்சம் முன்னே வந்து விளையாட வாய்ப்பு இருக்கிறது.
இந்த வகையில் சமீர் ரிஸ்வி எப்படி இறுதி கட்டத்தில் பந்துகளை அடிக்க வேண்டும் என்பது குறித்து தோனி அவருக்கு பாடம் நடத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் சமீர் ரிஸ்வி, பெரிய ஷார்ட் ஆட சொல்லி தோனி அதனை கண்காணித்தார். சமீர் ரிஸ்வி மற்றும் தோனி இருவரும் மாற்றி மாற்றி பயிற்சி முகாமில் பெரிய ஷார்ட் அடித்து பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது தோனி, பந்தை எவ்வாறு அடிக்க வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை எடுத்து உரைத்தார். இந்த பயிற்சி முகாமை கவனித்த ஜடேஜாவும் சமீர் ரிஸ்விக்கு தன்னுடைய அறிவுரைகளை கூறினார். ஜடேஜா தோனி என ஸ்டார் வீரர்கள் சமீர் ரிஸ்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கும் போது அவர் இனிவரும் ஆட்டங்களில் மிக முக்கியமான வீரராக சிஎஸ்கேவுக்கு திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமை இருந்தாலும் அதனை அவர் சரியாக முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அது அணிக்கும் நன்மையை பயக்கும் அவருக்கும் நன்மையை கொடுக்கும்.