சென்னை : ஐபிஎல் தொடரில் கடந்த 14 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக ஒரு மோசமான பேட்டிங் சாதனையை செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக சராசரியாக இருந்தது. மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் படுமோசமான சாதனையை செய்தது சிஎஸ்கே அணி.
முதல் ஆறு ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடிய சிஎஸ்கே அணி அதன் பின் 15வது ஓவர் வரை இருந்த இடம் தெரியாமல் டெஸ்ட் போட்டி போல ரன் சேர்த்தது. துவக்க வீரர்கள் அஜின்க்யா ரஹானே - ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து முதல் ஆறு ஓவர்களில் 55 ரன்கள் குவித்தனர். அதிலும் ஆறாவது ஓவரின் கடைசி மூன்று பந்திலும் ஃபோர் அடித்தார் ரஹானே.

ஆனால், ஏழாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் எட்டாவது ஓவரில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் பந்து வீசத் துவங்கிய பின் நிலைமை மாறியது. அவர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ரஹானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சிவம் துபே 0, ரவீந்திர ஜடேஜா 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், சமீர் ரிஸ்வி இணைந்து நிதான ஆட்டம் ஆடினர். இருவரும் 15வது ஓவர் முடியும் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதை அடுத்து 7வது முதல் 15வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட எடுக்காத அணிகளின் பட்டியலில் நான்காவதாக இணைந்தது சிஎஸ்கே அணி.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மூன்று அணிகள் மட்டுமே இந்த மோசம்னா சாதனையை செய்து இருந்தன. புனே வாரியர்ஸ் (கொல்கத்தா அணிக்கு எதிராக 2012), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக 2017), ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2021).
அந்த அணிகளின் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவதாக இணைந்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணி இந்த மோசமான சாதனையை செய்ததே இல்லை. 2024 ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது சாதாரணமான ஸ்கோர் ஆகி விட்ட நிலையில் மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ஆடி இருக்கிறது சிஎஸ்கே அணி.