சென்னை : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் தடுமாறியது. முதல் 6 ஓவர்கள் பவர் - பிளேவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழக்காமல் ஆடி இருந்தது. 2024 ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் ஆடி இருந்தது சிஎஸ்கே அணி. அந்த ஆறு ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து இருந்தனர் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜின்க்யா ரஹானே.
ஆனால், ஆறு ஓவர்கள் முடிந்த உடன் சிக்கல் ஆரம்பித்தது. இந்தப் போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை அடுத்து பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் சுழற் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் பிராரை பந்து வீச அழைத்தார். அவர் வீசிய ஏழாவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது அடுத்து மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் வீசிய எட்டாவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே.

அடுத்து ஹர்ப்ரீத் பிரார் மீண்டும் 9வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ரஹானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சிவம் துபே மூன்றாவது வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டார். சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிவம் துபே அதிரடியாக ரன் குவிப்பார் என திட்டமிட்டு அனுப்பப்பட்டு இருந்தார். ஆனால், அவர் பிரார் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதை அடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்களை இழந்து சிஎஸ்கே அணி அழுத்தத்தில் சிக்கியது. அடுத்து வந்த ஜடேஜா 10வது ஓவரில் ராகுல் சகார் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வியும் நிதானமாக ரன் சேர்த்தார்.
ஹர்ப்ரீத் பிரார் வீசிய ஒரே ஓவரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மொத்தமாக அழுத்தத்துக்கு உள்ளானது. ருதுராஜ் கெய்க்வாட் ரன் குவிக்க முடியாமல் திணறினார். பின்னர் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிந்த பின்னர் வேகம் எடுத்த ருதுராஜ் 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார், 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.