IPL 2024: "தோனி சிஎஸ்கே அணியில் ஆட வேண்டிய அவசியமே இல்லை" பொங்கி எழுந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் இறங்கியது கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.
முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங் தோனி மேல் வரிசையில் பேட்டிங் செய்யாமல் ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் இறங்கியது குறித்து கடுமையாக பேசியுள்ளனர். குறிப்பாக அவர் ஒன்பதாம் வரிசையில் இறங்குவதற்கு பதிலாக விளையாடாமல் இருக்கலாம். அவரது இடத்தை ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு கொடுக்கலாம் என பேசி உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்தான் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்தார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் பந்துவீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்தனர்.
அந்த நேரத்தில் நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் தோனி பேட்டிங் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் செய்தார். சிஎஸ்கே அணி 167 ரன்கள் எடுத்து, இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று விட்டது.
ஆனால், இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம் செய்து உள்ளனர். இது பற்றி இர்பான் பதான் பேசுகையில், "தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்வது சிஎஸ்கே அணிக்கு வேலை செய்யாது. அது எந்த வகையிலும் அந்த அணிக்கு உதவாது. அவருக்கு 42 வயதாகிறது என்பது நமக்கு தெரிகிறது. ஆனாலும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டு பேட்டிங் ஆர்டரில் மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும். அவர் குறைந்தது நான்கு அல்லது ஐந்து ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும். அவர் கடைசி ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர்களுக்கு மட்டும்தான் பேட்டிங் செய்கிறார். அது நீண்ட கால அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு எந்த வகையிலும் உதவாது. சிஎஸ்கே அணி இனி 90 சதவீத போட்டிகளில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். ஒரு மூத்த வீரராக, ஃபார்மில் இருக்கும் வீரராக அவர் பேட்டிங் ஆர்டரில் மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும்" எனக் கூறி இருக்கிறார்.
அடுத்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "பேட்டிங் ஆர்டரில் ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கப் போகிறார் என்றால் தோனி விளையாட வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு பதிலாக ஒரு வேகப் பந்துவீச்சாளரை களம் இறக்கலாம். தோனி தான் சிஎஸ்கே அணியில் முடிவுகளை எடுக்கிறார். ஆனால் தனது அணியை கைவிடும் வகையில் அவர் அவசியம் ஏற்படும் போதும் பேட்டிங் இறங்க மறுக்கிறார். அவருக்கு முன் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்ய வருகிறார். தாக்குரால் தோனியை போல அதிரடி ஷாட்களை ஆட முடியாது. தோனி ஏன் இந்த தவறை செய்தார் என எனக்கு புரியவில்லை. அவரது அனுமதி இல்லாமல் சிஎஸ்கே அணியில் எதுவும் நடக்காது. அவரை பேட்டிங் ஆர்டரில் ஒன்பதாம் வரிசையில் இறங்கச் செய்த முடிவை வேறு யாரோ ஒருவர் எடுத்தார்கள் என்பதை நான் நம்ப மாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications