தரம்சாலா : தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பி விக்கெட்களை இழந்து வந்தது. எப்படியும் சிஎஸ்கே அணியை ஆல் அவுட் ஆக்கிவிடலாம், 150 ரன்களுக்குள் சுருட்டலாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி திட்டமிட்டது.
ஆனால் சிஎஸ்கே அணியின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவர் வரை களத்தில் நின்று அதிரடியாக ரன் சேர்த்து அணியை மீட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் திட்டம் நிறைவேறாமல் போனது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அஜின்க்யா ரஹானே 9 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து அணியை மீட்டனர்.
ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். மொயீன் அலி 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தார். மறுபுறம் விக்கெடுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
அடுத்து மிட்செல் சான்ட்னர் 11 ரன்கள் எடுத்து நடையைக் காட்டினார். ஷர்துல் தாக்கூர் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வந்த தோனி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் கடைசி ஓவர் வரை நின்று ரன் குவித்த ரவீந்திர ஜடேஜா 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியால் சிஎஸ்கே அணியை ஆல் அவுட் செய்ய முடியவில்லை.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் ராகுல் சாஹர் 3, ஹர்ஷால் பட்டேல் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், கேப்டன் சாம் கர்ரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.