தரம்சாலா : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் சிஎஸ்கே அணியில் பல வீரர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கூறினார்.
அதனால் யாரை போட்டியில் களம் இறக்குவது என்று தெரியாத சூழ்நிலை இருந்ததாகவும், போட்டி துவங்கும் முன்னர் தான் களமிறங்கும் வீரர்கள் பட்டியலை முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் பல வீரர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 167 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அபாரமாக பந்து வீசி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் சிமர்ஜீத் சிங் களமிறக்கப்பட்டார். அவர் வேகப் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு இரண்டு விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவருக்கு ஏன் இதற்கு முன் வாய்ப்பளிக்கவில்லை என்ற கேள்விக்கும் ருதுராஜ் பதிலளித்தார்.
இது பற்றி ருதுராஜ் பேசுகையில், "இந்த பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக நாங்கள் அனைவரும் நம்பினோம். மேலும் பவுன்ஸ் மிக குறைவாக இருந்தது. ஆனால், நாங்கள் இந்த போட்டியில் நல்ல துவக்கம் பெற்றதால் 180 முதல் 200 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்தோம். விக்கெட்களை இழந்த பின் 160 முதல் 170 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம்" என்றார்.
அடுத்து சிமர்ஜீத் சிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "அவர் எங்கள் அணியில் என்ன செய்கிறார் என்று எனக்கும் தெரியவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பே 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அவருக்கு எங்கள் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எதுவும் தாமதம் இல்லை. அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் ஒரு இம்பேக்ட் பேட்ஸ்மேனை இறக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், அவரால் 10 அல்லது 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் இம்பேக்ட் பந்துவீச்சாளராக சிமர்ஜீத் சிங்கை இறக்கினால் இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்து அவரை களம் இறக்கினோம்" என்றார் ருதுராஜ்.
மேலும், "எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காய்ச்சல் உள்ளது. அதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இன்று காலை வரை போட்டியில் யார் ஆட போகிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார் ருதுராஜ்.