தர்மசாலா : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தர்மசாலாவில் நடைபெறும் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம்கரன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த தொடரில் 10 முறை டாசை இழந்து இருக்கிறார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை தழுவி இருக்கிறது.

இதனால் இந்த தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே அணி வீரர்கள் இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யார் களமிறங்க போகிறார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை சிஎஸ்கே அணி களம் இறக்கி இருக்கிறது. இதேபோன்று கடந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய துஷார் தேஷ் பாண்டே தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார். இதனால் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு முடிவை சிஎஸ்கே எடுக்கவில்லை. தொடர்ந்து ரஹானே தான் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறார். இது சிஎஸ்கேவுக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம். பஞ்சாப் அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருத்ராஜ், கடந்த போட்டியில் தாங்கள் செய்த தவறை இன்றைய ஆட்டத்தில் சரி செய்ய முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த தொடரில் சில வீரர்கள் பல காரணங்களால் விளையாட முடியவில்லை எனக் குறிப்பிட்ட ருதுராஜ், பத்து முறை டாசை தாம் இழந்தாலும் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதை பாசிட்டிவாக கருதுவதாக கூறியுள்ளார்.