சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு அந்த ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.
அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பிடித்து நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என கூறப்படுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என வல்லுனர்கள் கூறுகின்றனர். அது எப்படி சாத்தியம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், இரண்டாவதாக சேஸிங் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று தோல்வி அடைய வேண்டும்.
அப்படி செய்தால் பெங்களூரு அணியால் அதிக நெட் ரன் ரேட் பெற முடியாது. அதன் மூலம் சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன், அதிக நெட் ரன் ரேட் பெற்று பெங்களூரு அணியை விட முன்னிலையில் இருக்கும். இதை தவிர்த்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தான் விளையாடும் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட முடியும். இதன் மூலம் பெங்களூரு அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கே அணி பறித்து விடும்.