CSK vs RCB: தனிமையில் அமர்ந்து கண்கலங்கிய தோனி.. கடைசி ஐபிஎல் தொடரில் நடந்த சோகம்.. என்ன நடந்தது?
சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், தோனி தனியாக அமர்ந்து கண்கலங்கிய காட்சிகள் வெளியானது. இதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் கலங்கிய நிலையில் விடை பெற இருக்கிறார் என கூறி வருகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கூட சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்தப் போட்டியில் தோனி கடைசி ஓவர் வரை சிஎஸ்கே அணியை எப்படியாவது பிளே ஆஃப் அழைத்துச் செல்ல வேண்டும் என முயன்றார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறும் என்ற நிலையில் தோனி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். அவர் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதை அடுத்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்விக்கு பின் தோனி ஓரமாக சென்று இருக்கையில் அமர்ந்து கண்கலங்கினார். அந்த காட்சி நேரலையில் காட்டப்பட்டது. அதை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தன்னால் சிஎஸ்கே அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற சோகத்தில் தோனி கண் கலங்கியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் ஆடி முடித்துள்ள சிஎஸ்கே அணி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications