சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர இளம் வீரர் மதீஷா பதிரனா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் பட்டத்துடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய முஷ்தாஃபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மிட்சல், துபே, ஜடேஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக சிஎஸ்கே அணி வீரர்கள் பலரும் கான்வே மற்றும் பதிரனாவின் இடத்தை எப்படி நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதனை எளிதாக ரச்சின் மற்றும் முஷ்தாஃபிசுர் ரஹ்மானை வைத்து சிஎஸ்கே அணி சமாளித்துள்ளது.
கான்வே மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இன்னும் 6 வாரங்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான பதிரனாவும் காலில் காயமடைந்துள்ளதால், முதல் பாதி ஆட்டங்களை தவறவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் வங்கதேச டி20 தொடரின் போது காயமடைந்த பதிரனா, உடனடியாக இலங்கை திரும்பி சிகிச்சை பெற்றார்.
அவர் பவுலிங் செய்யும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் பதிரனாவுக்கு என்ஓசி சான்றிதழ் அளிக்காமல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த பதிரனா, தற்போது விமானம் வாயிலாக சென்னை வந்து சேர்ந்துள்ளார். இவர் நாளை சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும், தோனியின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தார் பதிரனா. இதனால் இந்த சீசனில் நேரடியாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் பதிரனா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மார்ச் 26ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியில் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.