சென்னை : ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக், சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி முறையாக விளையாடிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத முன்னணி அணிகளில் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் விராட் கோலிக்கு பின் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய முதல் சீசனிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சீசனில் சொதப்பினாலும், ஆர்சிபி அணி அவரை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் அவசியமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இருந்தார். சேப்பாக்கம் மைதானத்தின் அத்தனை நுட்பங்களையும் அறிந்தவர் என்பதால், அவரின் அனுபவத்தை ஆர்சிபி பயன்படுத்தி கொள்ளும் என்று பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப விரைவாக ஆர்சிபி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்த போது களம் புகுந்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளில் 38 ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணி சவாலாக இலக்கை நிர்ணயிக்க உதவினார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலும், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
இந்த செய்தியாளர்களை சந்தித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் இதுதான் கடைசி போட்டியா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் என் கடைசி போட்டியாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிளே ஆஃப் சுற்றில் விளையாட மீண்டும் சேப்பாக்கம் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒருவேளை நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்றால், இதுதான் என் கடைசி போட்டியாக இருக்கும். இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது வர்ணனையும் செய்து கொண்டே, இன்னொரு பக்கம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டேன். அதுகொஞ்சம் கடினமாக இருந்தது. முதல் போட்டியிலேயே ரன்களை என்னால் சேர்க்க முடிந்தது நல்ல உணர்வை கொடுக்கிறது. எனக்கு இந்த போட்டி நன்றாக அமைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே வர்ணனையில் ஆர்வம் காட்டி வரும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், இதுதான் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.