CSK vs RCB: சிஎஸ்கேவின் இந்த பிடிவாதம் தான் இந்த தோல்விக்கு காரணம்.. உண்மையை உடைத்த விமர்சகர்கள்
பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு காரணம் பேட்டிங் ஆல் - ரவுண்டர்களுக்கு பந்து வீச வாய்ப்பு தர மாட்டோம் என்ற சிஎஸ்கே அணியின் பிடிவாத குணம் தான் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பேட்டிங் மோசமாக இருந்தது தான் காரணம் என்றாலும் கூட பந்து வீச்சில் ஒரு சொதப்பலை செய்தது.

இந்த போட்டி நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. அதற்கு ஏற்ப சிஎஸ்கே அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். தீக்ஷனா, மிட்செல் சான்ட்னர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் பந்து வீசினர். இந்த மூவரில் ஜடேஜா அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால், தீக்ஷனா ஒரு ஓவருக்கு சராசரியாக 6.25 ரன்களும், சான்ட்னர் ஒரு ஓவருக்கு சராசரியாக 5.75 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.
வேகப் பந்துவீச்சாளர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். தேஷ் பாண்டே ஒரு ஓவருக்கு 12 ரன்களும், ஷர்துல் தாக்குர் 15 ரன்களும் விட்டுக் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி நான்காவதாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தி இருக்க முடியும். ரச்சின் ரவீந்தரா சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தான். அவருக்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் கொடுத்து, அவர் கட்டுக்கோப்பாக வீசி இருந்தால் நிச்சயம் ஆர்சிபி அணிக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை சிஎஸ்கே அணி தவறவிட்டது.
அதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி பேட்டிங் ஆல் ரவுண்டர்களை பந்துவீச்சுக்கு பயன்படுத்துவதில்லை என்ற ஒரு பிடிவாத குணத்துடன் உள்ளது. இதற்கு உதாரணம், சிவம் துபே. அவர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்றாலும் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிப்பதே இல்லை. அதே போல ரச்சின் ரவீந்திராவும் சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்றாலும் அவருக்கு இந்த தொடரில் ஒன்று, இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த முக்கியமான போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் மட்டுமே ரன் குவிக்கப்படவில்லை எனும் நிலையில் ரச்சினை பயன்படுத்தி இருக்கலாம். அந்த வாய்ப்பை சிஎஸ்கே தவறவிட்டது. அதன் காரணமாகவே சிஎஸ்கே தோல்வி அடைந்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications