பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.
அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டில் சிஎஸ்கேவை முந்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்தப் போட்டி ரசிகர்களால் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் கூட அவ்வளவு எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட முடியாது எனக் கூறப்படுகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்திலும், சேஸிங் செய்தால் 18.1 ஓவரில் சேஸிங் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அப்படி செய்தால் அந்த அணி அதிக என் ரன் ரேட் பெற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எனக் கூறப்பட்டது.
ஆனால் இது உத்தேசமான கணக்கு மட்டுமே. அதாவது முதலில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்கள் குவித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற அடிப்படையில் இந்த கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடைபெற உள்ள சின்னசாமி மைதானத்தில் மிக எளிதாக 200 ரன்களை கடந்து ரன் குவிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 210 ரன்கள் எடுத்தாலும் மேலே சொன்ன கணக்கில் மாற்றம் ஏற்படும்.
ஒருவேளை சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 230 அல்லது 240 ரன்கள் குவித்தால் பெங்களூரு அணிக்கு சிக்கல் அதிகமாகிவிடும். அந்த அணி அதிக பந்துகள் மீதமிருக்கும் வகையில் சேஸிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கும் குறைவாக ஸ்கோர் எடுத்தால் சிஎஸ்கே கடைசி ஓவர் வரை சென்று கூட தோற்றாலும் கூட பெங்களூரு அணியால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை முந்த முடியாமல் போய்விடும். அந்த வகையில் சிஎஸ்கே அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கடுமையாக அழுத்தம் கொடுத்தால் பெங்களூரு அணியை எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்து விட முடியும்.