பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
மேலும் இந்த போட்டி நடக்க உள்ள பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால் போட்டி கைவிடப்படவோ அல்லது ஓவர்கள் குறைத்து நடத்தப்படவோ வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பாதகமாக அமையும் என கூறப்படுகிறது. ஆனால் அந்த அணியின் ரசிகர்கள் ஒரு புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். மழை வந்தாலும் சிஎஸ்கே அணியை தோற்கடித்து, ஆர்சிபி அணி வெல்வது உறுதி என அவர்கள் கூறி வருகின்றனர். அது என்ன புள்ளி விவரம்?

ஐபிஎல் வரலாற்றில் மே 18-ஆம் தேதி அன்று ஆர்சிபி ஆடிய போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை. மே 18ஆம் தேதியில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது ஆர்சிபி அணி. அந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் இரண்டு போட்டிகள் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போதும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் விராட் கோலி அந்தப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். இந்த தகவலால் தான் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி வருகின்றனர்.
2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மே 18 அன்று ஆர்சிபி அணி விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. அதே போல 2016 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியையும், 2023 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் மே 18 அன்று நடந்த போட்டிகளில் வீழ்த்தி உள்ளது.
2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மே 18 அன்று நடந்த போட்டிகளின் போது மழை பெய்தது. அதனால் அந்த போட்டிகள் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெற்றன. ஆர்சிபி அந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2013 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக போட்டி 8 ஓவராக குறைத்து நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் விராட் கோலி 29 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியிருக்கிறார்.
அதே போல 2013இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி 50 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதை சுட்டிக்காட்டி மே 18 அன்று (இன்று) சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால், விராட் கோலி அபாரமாக ஆடுவார், சிஎஸ்கே அணி தோற்கும், ஆர்சிபி அணி வெற்றி பெறும் என அந்த அணியின் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.