சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இனி ருதுராஜ் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் என அனைவரும் நம்பி வரும் நிலையில் அவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என இர்பான் பதான் கூறி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. வரும் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை அன்று தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு வேளை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனால், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் கேப்டன்சியை பறித்ததை போல ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியும் பறிக்கப்படலாம் என இர்பான் பதான் எச்சரித்து இருக்கிறார்.
2022 ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால், முதல் எட்டு போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. அதன் பின்பு ஜடேஜாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு மீண்டும் தோனியே சிஎஸ்கேவின் கேப்டன் ஆனார்.
அதே போன்ற நிலை மீண்டும் வரக்கூடும். எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியை ருதுராஜ் வெற்றி பெற வைக்க வேண்டும் என பதான் கூறினார். "சிஎஸ்கே அணியில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. புதிய கேப்டன் தலைமையில் அந்த அணி ஆடுகிறது. தோனி அந்த அணியின் கேப்டன் இல்லை. எனவே சிஎஸ்கே அணி இக்கட்டான நிலையில் இருக்கிறது" என பதான் குறிப்பிட்டு இருக்கிறார்.