சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியின் இடையே தோனியின் மனைவி சாக்ஷி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் படுமோசமாக சொதப்பி விக்கெட்களை இழந்து வந்தது.

முதல் நான்கு ஓவர்களுக்குள் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன்களான ட்ராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தனர். இம்பகட் வீரராக வந்த அன்மோல்ப்ரீத் சிங்கும் விக்கெட்டை இழந்தார். அப்போதே 3 விக்கெட்களை இழந்தது ஹைதராபாத் அணி. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் 15, மார்கிரம் 32, கிளாசன் 20, அப்துல் சமத் 19 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
எப்படியும் சிஎஸ்கே அணி வெற்றி பெறப் போவது உறுதியாகி விட்ட நிலையில் சாக்ஷி ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார். அந்த பதிவில் தோனி கீப்பிங் நின்று இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "இன்று சீக்கிரம் போட்டியை முடித்து விடுங்கள். குழந்தை பிறக்கப் போகிறது. வலி எடுக்கத் துவங்கி விட்டது. இது அத்தையாகப் போகும் எனது கோரிக்கை" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சாக்ஷியின் சகோதரர் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் இந்தப் பதிவை பகிர்ந்து இருந்தார். சிஎஸ்கே அணியை விரைவாக வெற்றி பெறுங்கள் என அதிக நம்பிக்கையுடன் கூறி சாக்ஷி பகிர்ந்த இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
சாக்ஷியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் போட்டி 18.5 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. 7 பந்துகள் மீதமிருக்கும் போதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்களுக்கு சுருண்டது. சிஎஸ்கே அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.