6 நிமிடத்தில் செஞ்சுரி.. 10 பந்தில் நடந்த மேஜிக்.. வாயடைத்துப் போன விராட் கோலி.. 100 ஆக மாறிய 50
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் வெறும் ஆறு நிமிடத்தில் அரைசதத்தை சதமாக மாற்றினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 15.2வது ஓவரில் அரைசதம் அடித்து இருந்த அவர், அடுத்த 10 பந்துகளில் சதம் கடந்து பெரும் வியப்பை ஏற்படுத்தினார். அவருடன் பேட்டிங் செய்து வந்த விராட் கோலி அதைப் பார்த்து வாயடைத்துப் போனார்.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது. அகமதாபாத் மைதானத்தில் இது நல்ல ஸ்கோர் என்பதால் அந்த அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்தது.

துவக்க வீரர் டுபிலேசிஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்து சென்றார். அடுத்து விராட் கோலி, வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தனர். வில் ஜாக்ஸ் சற்று நிதானித்து ஆடி வந்தார். மறுபுறம் விராட் கோலி அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார்.
14வது ஓவரின் முடிவில் கோலி 43 பந்துகளில் 69 ரன்களும், வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து குஜராத் அணியின் மோஹித் சர்மா வீசிய 15வது ஓவரில் வில் ஜாக்ஸ் முதல் இரண்டு பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்.
அடுத்த 10 பந்துகளில் தொடர்ந்து சிக்ஸ், ஃபோராக அடித்துத் தள்ளிய அவர் சரியாக வெற்றிக்கு தேவையான ரன்களை சிக்ஸ் அடித்து தன் சதத்தையும் நிறைவு செய்தார். 41 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். 14.2 ஓவரில் அரைசதம் அடித்து இருந்த அவர் மோஹித் சர்மா ஓவரை அடுத்து ரஷித் கான் வீசிய 16வது ஓவரிலும் ருத்ர தாண்டவம் ஆடி 15.6 ஓவரின் முடிவில் சதம் அடித்தார்.
சரியாக மாலை 6.42 மணிக்கு அரைசதம் அடித்தார். அதே போல, 6.48 மணிக்கு சதம் அடித்தார். வெறும் 6 நிமிடங்களில் அரைசதத்தை சதமாக மாற்றினார். தான் அரைசதம் அடிக்கும் வரை அம்பியாக இருந்த வில் ஜாக்ஸ், அதன் பின் அந்நியனாக மாறி சிக்ஸர் மழை பொழிந்ததை பார்த்து விராட் கோலி வாயடைத்துப் போனார். வில் ஜாக்ஸ் 5 ஃபோர் மற்றும் 10 சிக்ஸ் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications