சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறி உள்ள நிலையில் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மீதம் உள்ளன.

தற்போது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது இடத்தில் இருப்பது நல்ல செய்தியாகும். அதே சமயம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இரண்டுமே 12 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் பெற்று 12 புள்ளிகள் உடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு கெட்ட செய்தியாகும். இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தங்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்று அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
அதே போல சிஎஸ்கே அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான பதிரானா, தீபக் சாஹர் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் விலகி உள்ளதும் அந்த அணியின் ரசிகர்களுக்கு கெட்ட செய்தியாக உள்ளது.
சிஎஸ்கே அணி அடுத்து குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. சிஎஸ்கே அணி இந்த மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வென்று அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். ஒருவேளை மூன்று லீக் போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அமையும்.