சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் 2025 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்குமா? அல்லது மெகா ஏலத்தில் அவர் பங்கு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தோனி ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பே இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் மூன்று வீரர்களை மட்டுமே ஒரு அணி தக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வீரரை வேறு ஒரு அணி ஏலத்தில் வாங்கிய பின் ரைட் டூ மேட்ச் என்ற விதியை பயன்படுத்தி மீண்டும் தங்கள் அணிக்கே அழைத்துக் கொள்ளலாம். ஆக மொத்தம் நான்கு வீரர்களை மட்டுமே ஒரு அணி தக்க வைக்க முடியும்.
மற்ற வீரர்கள் எல்லாம் ஐபிஎல் ஏலத்துக்கு முன் விடுவித்து தான் ஆக வேண்டும். கடந்த காலத்தில் தங்கள் அணியில் ஆடிய வீரர்கள் தங்களுக்கு வேண்டுமென்றால் ஏலத்தில் மற்ற அணிகளுடன் போட்டி போட்டு தான் அவர்களை வாங்க வேண்டும். அந்த வகையில் தோனியின் சம்பளம் அதிகமாக இருப்பதற்காக ஏலத்தில் விடுவித்தால் பல்வேறு சிக்கல்கள் எழும்.
முதலில் அது தோனியை அவமானப்படுத்துவது போல ஆகிவிடும். மேலும், மற்ற அணிகள் அவருக்கு மிக அதிக தொகையை ஏலத்தில் கேட்க வாய்ப்பு உள்ளது. மறுபுறம் தோனியை சிஎஸ்கே தக்க வைத்தால் அவருடன் மேலும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். சில முக்கிய வீரர்களை ஏலத்தில் விடுவித்து விட்டு பின் மற்ற அணிகளுடன் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே அணி தள்ளப்படும்.
இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "தோனியை பொறுத்தவரை அவர் சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவர் நிச்சயம் அணியில் இருப்பார். ஒருவேளை அவர் தனக்காக கொடுக்கப்படும் சம்பளம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீணாகும் என்று நினைக்கலாம். மற்ற வீரர்களை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்படும் என அவர் நினைக்கலாம். தனக்காக எட்டு அல்லது பத்து கோடி வரை சிஎஸ்கே அணி செலவு செய்ய வேண்டும். அதன் காரணமாக வேறு வீரர்களை ஏலத்தில் விட்டுவிட்டு பின்பு மீண்டும் வாங்குவது சிக்கலாகும் என்று அவர் யோசிப்பார். சிஎஸ்கே அணி தோனியை தக்க வைக்குமா? இல்லையா? என்று என்னால் 100% உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், அவர் நிச்சயம் ஏலத்துக்கு போக மாட்டார் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். ஆனால், சிஎஸ்கே அணி அவரை தக்க வைக்குமா? அவர் போட்டிகளில் விளையாடுவாரா? அது இப்போதைக்கு நம்மால் சொல்ல முடியாது." என்றார்.