டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 73 ரன்களை வாரிக் கொடுத்து இந்த மோசமான சாதனையை பதிவு செய்தார் மோஹித் சர்மா.
டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஆனால், அதன் பின் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் - ரிஷப் பண்ட் போட்டியை மாற்றினர்.

அக்சர் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவர் சென்ற பின் கடைசி 3 ஓவர்களில் களத்தில் பண்ட் உடன் பேட்டிங் செய்த ஸ்டப்ஸ் வெறும் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட்டும் அதிரடி ஆட்டம் ஆடி 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். அதிலும் போட்டியின் 20வது ஓவரில் மட்டும் ரிஷப் பண்ட் 4 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். மோஹித் சர்மா அந்த ஓவரில் மட்டுமே 31 ரன்கள் குவித்தது டெல்லி அணி.
இதை அடுத்து மூன்று ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து இருந்த மோஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுவே மோசமான பந்துவீச்சாகும். இதற்கு முன் 2018இல் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பேசில் தம்பி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 70 ரன்கள் கொடுத்ததே ஐபிஎல் தொடரின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் மோஹித் சர்மா.
இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் சேஸிங்கில் சாஹா 25 பந்துகளில் 39, சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 65, டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்தனர். எனினும், அந்த அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை வரை சென்று 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.