கொல்கத்தா : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தமிழக கிரிக்கெட் வீரர் வ்ருண் சக்கரவர்த்தி தன்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார். கே கே ஆர் அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தவர்.
நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தாம் விளையாடிய முதல் போட்டியிலே 55 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதைப் போன்று கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று ஓவர்களில் 46 ரன்கள் சக்கரவர்த்தி விட்டுக் கொடுத்தார்.

இதில் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8 விக்கெட் தான் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தி இருந்தார். இதனால் அவருடைய இடம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி நெருக்கடியை ஏற்படுத்தினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்ற நிலையில் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் சக்கரவர்த்தி இன்றைய ஆட்டத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளும் செயல்பட்டதாக கூறினார்.
இது குறித்து பேசிய அவர் முதல் பந்தில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. ஆனால் அது நல்ல பந்து என்று நான் நினைக்கின்றேன். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பந்து வேறு ஏதேனும் மைதானமாக இருந்தால் அது நிச்சயமாக சிக்ஸராக தான் சென்றிருக்கும். கிரிக்கெட் என்பது சில அளவில் (பந்துவீச்சு அளவில்) மாற்றம் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு விக்கெட்டையும் கொடுக்கும் இல்லை சிக்ஸர்களும் செல்லும்.
நான் வீழ்த்திய விக்கெட்டுகளில் ஸ்டப்ஸுக்கு நான் வீசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலும் நானும் சுனில் நரேனும் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால் எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை, நான் சரியாக பந்து வீசவில்லை என்றால் சுனில் நரைன் எனக்கு உதவி செய்வார். கடைசி போட்டியில் நான் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தேன். அதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
ஆனால் எனக்கு அனைவரும் துணையாக இருந்தார்கள். முக்கியமாக ஷாருக்கானும், அபிஷேக் நாயரும் என்னிடம் பேசி எனக்கு ஆதரவாக இருந்தார்கள். என்னை கவலை கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். இருவரும் எனக்காக பேசியது என்னுடைய உத்வேகத்தை கூட்டியது. நான் சீயர் லீடர்சை நினைத்து கவலைப்படுகின்றேன். அவர்கள் தற்போது ஆட்டம் முழுவதும் ஆடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிக்ஸருக்கு மட்டும் கேர்ள்ஸ் ஆடினால் போதும் பவுண்டரிகளுக்கு ஆட வேண்டாம் என்றும் வருண் சக்கரவர்த்தி கூறினார்.