டெல்லி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நான் ஆடி இருந்தால் டெல்லி அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் என பேசி இருக்கிறார் ரிஷப் பண்ட்.
2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 208 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.
19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தப் போட்டிக்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி மோதிய போட்டிக்கு முன் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அவருக்கு அந்த தடையை பிசிசிஐ விதித்தது. மூன்று போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டது.
இதை அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பண்ட் இல்லாமல், அக்சர் பட்டேல் தலைமையில் ஆடியது. அந்தப் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியது.
அடுத்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும் நெட் ரன் ரேட் மிகக் குறைவாக இருப்பதால் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய ரிஷப் பண்ட், "இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் எங்களுக்கு நிறைய தொல்லை கொடுத்தார். அவரை விரைவாக வீழ்த்தி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிக நெட் ரன் ரேட் பெறலாம் என நினைத்தோம். நாங்கள் எடுத்தது நல்ல ஸ்கோர் தான். சிறப்பாக பந்து வீசினோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் நான் நிறைய நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அணியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. கடந்த போட்டிக்குப் பின்பும் கூட நாங்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக இருந்தோம். நான் மட்டும் கடைசி போட்டியில் ஆடி இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்போம்" என்றார்.