டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் அம்பயர் முடிவால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை பார்த்து "நீ அவுட், அவுட்.. வெளியே போ" என இடைவிடாமல் கத்தினார். அது மேலும் புகைச்சலை கிளப்பி இருக்கிறது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 221 ரன்கள் குவித்த நிலையில் அடுத்த ராஜஸ்தான் அணி சேஸிங் செய்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்து ஆடி வந்தார்.

இந்த நிலையில் 16வது ஓவரில் முகேஷ் குமார் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்ட நினைத்து தூக்கி அடித்தார். ஆனால் பந்தை பவுண்டரி எல்லைக்கு அருகே நின்று இருந்த டெல்லி வீரர் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். மூன்றாவது அம்பயர் அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என ரீப்ளே செய்து பார்த்தார். ஆனால் அந்த காட்சியை முழுமையாக ரீப்ளே செய்து பார்க்காத அவர் அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்தார்.
ஆனால் ஷாய் ஹோப்பின் கால் பவுண்டரி எல்லையில் உரசியது போல இருந்தது. ஆனால் அதை சரியாக பார்க்காமல் அம்பயர் அவுட் கொடுத்ததால் சஞ்சு சாம்சன் அம்பயருடன் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார். இது அவுட் இல்லை என முறையிட்டார். மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா? என கேட்டார் சஞ்சு சாம்சன்.
அப்போது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் எழுந்து நின்று, "இது அவுட்டுதான் வெளியே போ.. அவுட் தான் அவுட் தான்" என மீண்டும் மீண்டும் கத்தியபடி இருந்தார். அந்த காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பானது. அதை பார்த்த பலரும் டெல்லி அணியின் உரிமையாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக விமர்சனம் செய்தனர்.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 222 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் பின் தொடர்ந்து விக்கெட்களை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சஞ்சு சம்சனுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டதால் தான் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.