டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பேட்டிங் ஆர்டரை மாற்றிய அணி என்றால் அது டெல்லி கேபிடல்ஸ் அணி தான்.
அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் இயக்குனர் சவுரவ் கங்குலி ஆகிய இருவரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள். அவர்கள் காலத்தில் சிறந்த கேப்டன்களாக இருந்தவர்கள். அவர்கள் கேப்டன்களாக இருந்த போது ஒரு தொடரின் இடையே அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்ற மாட்டார்கள்.

ஆனால், அவர்களால் நிர்வகிக்கப்படும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இன்னும் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் யார் என்பது தெரியாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி கடந்த காலங்களில் அந்த அணியில் நான்காம் வரிசையில் களமிறங்கி சிறப்பாக ரன் குவித்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் வரிசையும் மாறிக் கொண்டே உள்ளது.
அது மட்டுமின்றி காயம் காரணமாக அந்த அணியில் இடம் பெற்று இருந்த மிட்செல் மார்ஷ் விலகிய பின் மூன்றாம் வரிசையில் ஃபினிஷரான அபிஷேக் போரலை பேட்டிங் செய்ய வைத்தனர். இப்படி பல்வேறு குழப்பங்கள் காரணமாக டெல்லி அணி பேட்டிங்கில் சொதப்பி தான் ஆடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்தது.
எனினும், அந்த அணியின் சில பேட்டிங் வரிசை மாற்றங்கள் பலன் அளித்து இருக்கிறது. டேவிட் வார்னருக்கு பதில் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட ஜேக் பிரேசர் மெக்கிர்க் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அதிரடி துவக்கம் அளித்து இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாம் வரிசையில் அக்சர் பட்டேல் களமிறக்கப்பட்டார். அவர் தன் கிரிக்கெட் வாழ்வில் மூன்றாவது முறையாக ஒரு டி20 போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அவர் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவரை டாப் ஆர்டரில் ஆட வைத்த முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், அவர் இனி தொடர்ந்து மூன்றாம் வரிசையில் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.