டெல்லி : பாட்டியின் மறைவு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே டெல்லி அணிக்கு வேறு பிரச்சனை எழுந்துள்ளது.

ரூ.4 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து பின்வாங்கியுள்ளார். சிறிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் கடைசி நேரத்தில் பின் வாங்குவது தொடர் கதையாகி வந்தது. அப்படிதான் ஹாரி ப்ரூக்கும் விலகியதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியது ஏன் என்பது குறித்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை.
கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும் அவரே முதன்மையான காரணம். பாட்டி வீட்டில் இருந்து போது அவர் இல்லாமல் ஒருநாளும் முழுமையடையாது. நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை அவர் நேரில் வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் எனக்காக சில விருதுகளை பெற்று கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகவே மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அதேபோல் குடும்பத்தை கடந்து வேறு எதுவும் முக்கியமில்லை.
அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.