மும்பை : ஐபிஎல் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி தற்போது இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு டெல்லி அணி முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியில் 168 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு விளையாடிய டெல்லி அணியில் கேப்டன் ரிசப் பந்த் அபாரமாக விளையாடி 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட் பெரிய பாரம் குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், நான் எனது அணி வீரர்களிடம் சாம்பியன் போல் நாம் யோசிக்க வேண்டும். சாம்பியன்களை போல் நாம் விளையாட வேண்டும் என்று கூறினேன். ஒவ்வொரு போட்டியிலும் கடின உழைப்பையும் போராட்ட குணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தேன்.
சில போட்டிகளில் நாங்கள் எங்களுடைய திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. எங்கள் அணியில் உள்ள சில தனித்துவ வீரர்கள் தங்களுடைய முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நாங்கள் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்பட வேண்டும். எங்கள் அணியில் பல பிரச்சனைகள் இருக்கிறது.
எங்கள் அணியில் சில பல வீரர்கள் காயத்துடன் இருக்கிறார்கள். 10 அணிகள் இருக்கும். இந்த தொடரில் சரியான வீரர்களை அணியில் சேர்த்து விளையாடுவது கடினமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இது குறித்து எல்லாம் ஒரு குறையாக கூறி மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன். நாங்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வோம். எங்கள் அணியில் நம்பர் மூன்றாவது வீரர் யார் என்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்து விட்டோம் என்று நினைக்கின்றேன்.
தகுதி பெற முடியுமா என்று இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்ற பாணியில் விளையாடுகிறோம். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. தொடர்ந்து இதைப்போல் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன் என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.