ஐதராபாத்: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணி மீது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்தது. காரணம் ஐந்து முறை கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை அழைத்து கேப்டனாக மும்பை அணி நியமித்தது.
இது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த கேப்டன் பதவிக்காக காத்திருந்த பும்ரா போன்ற வீரர்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தரவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருப்பது ரோகித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறுவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் முறையான ஆதரவு தரவில்லையோ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வந்ததை வீரர்கள் விரும்பவில்லை என்று அடிக்கடி செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத் எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் அடிக்கப்பட்டதெல்லாம் மிகவும் மோசம் என்றும் ரசிகர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அதுவும் பும்ரா, கோயிட்சே போன்ற வீரர்கள் உள்ள நிலையில் எப்படி இந்த தவறு நிகழ்ந்தது என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் வீரர்கள் எப்படி பந்து வீசினால் அடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அதே முறையில் தொடர்ந்து பந்து வீசியது தான் தற்போது விமர்சனத்தை பெற்றிருப்பது. இது குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூட சில கட்டங்களில் நாங்கள் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் பவுலர்கள் அனுபவம் இல்லாதவர்கள் நான் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறினார். இது உண்மையிலேயே அனுபவம் இன்மையாக நடந்த தவறா? இல்லை வேண்டுமென்றே ஹர்திக் பாண்டியாவை முதுகில் குத்துவதற்காக செய்யப்பட்டதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.