மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிகப் பெரிய காரணமாக அமைந்தார். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டபோது தினேஷ் கார்த்திக் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
குறிப்பாக கடைசி ஓவரின் 10 ரன்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் இரண்டே பந்தில் சிக்ஸர் பவுண்டரியை அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்கள் அடிப்பது என்பது மிகவும் சிரமம். கடைசி ஓவரில் பெரும்பாலும் அடிக்கும் ரன்கள் தான் வெற்றிக்கு உதவும். குறிப்பாக சேசிங்கில் சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இருபதாவது ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ் ஆகியோரை ஓரங்கட்டி இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் டிவில்லியர்ஸ் 225 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 248 ரன்கள் அடித்திருந்த நிலையில் தற்போது தினேஷ் கார்த்திக் 268 ரன்களை அடித்து பட்டியலில் முன்னேறி இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலே கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று பெருமை இன்னும் தோனியிடம் மட்டும்தான் இருக்கிறது. அவர் 715 ரன்கள் அடித்திருந்தார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் 405 ரன்களுடன் பொலார்டும், 353 ரன்களுடன் ஜடேஜாவும், 287 ரன்களுடன் ஹர்திக் பாண்டியாவும் உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். கிரிக்கெட் வர்ணனையிலிருந்து தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்தார்.
ஆனால் அங்கு அவரால் சரியாக விளையாட முடியாத நிலையில் அணியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டு கிரிக்கெட் வர்ணனைக்கு வந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மீண்டும் ஆர்சிபி அணையில் இடம் பிடித்து தினேஷ் கார்த்திக் கெத்து காட்டி வருகிறார். இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக முறை ஆட்டம் இழக்காமல் இருந்த வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். தோனி ஜடேஜா தலா 27 முறை ஆட்டம் இழக்காமல் இருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 23 முறை ஆட்டமிழக்காமல் சேஸிங் செய்திருக்கிறார்.