மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் யாருமே கணிக்க முடியாத படி தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக பட்டையை கிளப்பி வருகிறார். ஆர்சிபி அணி இந்த தொடரில் தடுமாறி வந்தாலும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் 226 ரன்கள் குவித்திருக்கிறார்.
இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 205 என்ற அளவில் இருக்கிறது. இதனால் தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் என்னுடைய வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் நான் இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் மகிழ்ச்சியாக அதனை ஏற்றுக்கொள்வேன். அந்த வாய்ப்புக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவுக்காக டி20 உலக கோப்பையில் விளையாடுவதை விட என் வாழ்க்கையில் பெரிய அம்சம் எதுவுமே இருக்க முடியாது.

இந்திய அணி தற்போது நிலையான ஒரு அணியாக விளங்குகிறது. தற்போது அணியை நிர்வகிக்கக்கூடிய டிராவிட், ரோகித் சர்மா மற்றும் அகார்கர் ஆகியோர் மிகவும் சிறந்தவர்கள். இந்திய அணிக்கு எது நல்லது என்பதை நிச்சயம் அவர்கள் சிறப்பான முறையில் தேர்ந்தெடுப்பார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதனை மரியாதையுடன் ஏற்றுக் கொள்வேன்.
எப்போதுமே அவர்களுக்கு நான் துணை நிற்பேன். அதே சமயம் என்னை பொருத்தவரை டி20 உலக கோப்பையில் நான் விளையாட வேண்டும் என நினைத்தால் நான் 100% தயாராக இருக்கிறேன். உலக கோப்பைக்கு செல்ல வேண்டிய விமானத்தில் நான் இடம்பெற வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் ரஸில் அல்லது பொலார்ட் போல பலமான வீரர் கிடையாது.
என்னுடைய பலம் என்னவென்று எனக்கு தெரியும். என்னால் பெரிய ஷாட் ஆட முடியாது. எந்த பந்தை அடிப்பது? எந்த பந்தை விடுவது எந்த கேப்பை பார்த்து அடிப்பது என்பது குறித்து தான் நான் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருகிறேன். தற்போது ஆர்சிபி அணிக்காக பினிஷர் ரோலில் நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.