தோனியை வைத்து நடக்கும் ஏமாற்று வேலை.. உண்மை என்று நம்பினால் ரூ.600 காலி.. ரசிகர்கள் உஷார்
சென்னை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் பெயரில் ஒரு ஆன்லைன் மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் நான் தான் தோனி எனக் கூறி வாட்சப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதை உண்மை என நம்பினால் ரூ.600-ஐ இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
தற்போது 2024 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களை குறி வைத்து இந்த மோசடி நடந்து வருகிறது. இதில் முதலில் மர்ம நபர் ஒருவர் தோனி புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஒரு கணக்கில் இருந்து மெசேஜ் அனுப்புகிறார்.

அந்த மெசேஜில், "நான் தான் தோனி. என் தனிப்பட்ட கணக்கில் இருந்து உங்களுக்கு மெசேஜ் செய்கிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். என் பர்ஸை மறந்து விட்டேன். எனக்கு ரூ.600 போன்பே-வில் அனுப்ப முடியுமா? நான் வீட்டுக்கு சென்று பின் அதை திருப்பி அனுப்புகிறேன்" எனக் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த மெசேஜை பார்த்த உடன் ஒத்து போலி என பலராலும் கண்டுபிடித்து விட முடியும் என்றாலும், இந்த மெசேஜ் அனுப்பிய அடுத்த சில வினாடிகளில் "நான் தோனி தான் என்பதை நம்பவில்லை என்றால் என் செல்ஃபி" எனக் கூறி தோனி நிற்கும் செல்பி ஒன்றை அனுப்புகின்றனர்.
இது பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்களை குறி வைத்தே அனுப்பப்படுகிறது. அதில் சிலர் உண்மையிலேயே தோனி தான் நமக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என நம்பி பணத்தை அனுப்பி ஏமாந்து விடுகின்றனர். எனவே, இது குறித்து தோனியின் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2024 ஐபிஎல் தொடரில் தோனி அதிரடி ஆட்டம் ஆடி இதுவரை 6 போட்டிகளில் பேட்டிங் செய்து 260 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 91 ரன்கள் குவித்து இருக்கிறார். தோனி களத்துக்கு வந்தாலே ரசிகர்கள் உற்சாகத்தில் புரள்கிறார்கள். தோனிக்கு இருக்கும் வரவேற்பை பயன்படுத்தியே ஏமாற்று வேலைகளும் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications