மும்பை : 2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டு போட்டி நடத்தப்பட்டதா? என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இந்த சந்தேகம் எழ முக்கிய காரணம் சில மாதங்கள் முன்பு நடைபெற்ற 2024 மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி தான்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கும் அச்சடித்தாற் போன்ற ஒற்றுமை உள்ளது.

2௦24 மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அதில் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக் லானிங் செயல்பட்டார். வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா செயல்பட்டார். அப்படியே 2024 ஐபிஎல் தொடரில் என்ன நடந்தது எனப் பார்த்தால் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ் செயல்பட்டார். மறுபுறம் ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டார்.
மகளிர் ஐபிஎல் இறுதியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் பேட்டிங் தேர்வு செய்தார். ஆடவர் ஐபிஎல் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதேபோல ஆடவர் ஐபிஎல் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து மகளிர் ஐபிஎல்-இல் சேஸிங் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. அதேபோல இங்கே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதில் ஒரே ஒரு வித்தியாசமாக மகளிர் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் 114 ரன்கள் என்ற வெற்றி இலக்கை சேஸிங் செய்து முடித்து இருந்தது. இங்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து முடித்து இருந்தது.
இப்படி மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், ஆடவர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் இடையே அச்சடித்தாற் போன்ற ஒற்றுமை இருப்பதை சுட்டிக் காட்டும் ரசிகர்கள் இந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளுமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும், எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதா? என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். மேலும் சிலர் வேடிக்கையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான ஸ்கிரிப்ட் எழுதியவர் ரொம்ப சோம்பேறித்தனமாக மகளிர் ஐபிஎல் இறுதி போட்டிக்கு எழுதிய ஸ்க்ரிப்ட்டை அப்படியே கொடுத்துவிட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர்.