"பாஜக எதிர்ப்பாளர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பை வென்றார்".. கொண்டாடும் ரசிகர்கள்.. உண்மை என்ன?
சென்னை : 2024 ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது நாட்டை ஆளும் பாஜக அரசை விரும்பாத ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பாஜக எம்பி-யான கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் நிலையில் அவருடைய உதவியுடனே ஸ்ரேயாஸ் கேப்டனாக வெற்றி பெற்று இருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் பாஜகவை வெறுப்பவர் என சமூக வலைத்தளங்களில் கடந்த ஓராண்டாகவே தகவல் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் உள்ளது.

கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பின் போட்டியை காண வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களின் ஓய்வறைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வீரரையும் தட்டிக் கொடுத்து சில வார்த்தைகள் ஆறுதல் கூறினார். அப்போது ஸ்ரேயாஸ், பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தார். அவர் கை கொடுத்ததை அவர் விரும்பவில்லை என்பது போல முறைத்துப் பார்த்தார்.
அதன் பின் பாஜக அரசு தனது மிகப் பெரிய சாதனையாக விளம்பரப்படுத்திக் கொண்ட அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் போதும் அதைக் குறித்து அவர் எந்தவிதமான பதிவுகளையும் வெளியிடவில்லை. மேலும், பாஜக அரசை எதிர்த்து தேர்தல் நேரத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்த துருவ் ரத்தி என்ற யூட்யூப் பிரபலத்தை சமூக வலைத்தளத்தில் பின்பற்றி வருவதும் தெரிய வந்தது.
இடையே ஸ்ரேயாஸ் ஐயரின் பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அவர் முதுகு வலி என பொய்யான காரணத்தை கூறியதாக சுட்டிக்காட்டி அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தனக்கு உண்மையிலேயே முதுகு வலி இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிகளில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக பாஜக அரசுக்கும், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே முட்டல், மோதல் இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தான் 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிசிசிஐ செயலாளரும், பாஜகவின் முக்கிய நபருமான ஜெய் ஷாவிடம் இருந்து ஐபிஎல் கோப்பையை வாங்கும் போது ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இதை எடுத்து பாஜக எதிர்ப்பாளர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பை வென்றார் என சிலர் சமூக வலைதளங்களில் தகவலை பரப்பி வருகின்றனர். பாஜக எம்பி-யான கவுதம் கம்பீரை ஆலோசகராகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதால் இது பாஜகவின் வெற்றி என சிலர் கூறி வருகின்றனர்.
இப்படி இருவேறான கருத்துக்கள் நிலவும் நிலையில் உண்மையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேற்றுமையில் ஒற்றுமை என்பதைப் போல பாஜக எம்பி கம்பீர், பாஜக எதிர்ப்பாளர் ஸ்ரேயாஸ் ஐயர், இஸ்லாமியரான உரிமையாளர் ஷாருக் கான், ஆப்ரிக்க இனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், மற்றும் சுனில் நரைன் என சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனவும் சிலர் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications