சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. அந்த இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தேர்வாகி உள்ளது.
முதல் தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது. இந்த நிலையில் இறுதிப் போட்டியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் வெல்லப் போகிறது என விமர்சகர்கள் பலரும் கூறி உள்ளனர்.

தற்போது தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இரண்டாவது தகுதிப் போட்டியில் மோதும். அதன் முடிவில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதப் போகும் அணி எது? என்பது தெரியவரும்.
மற்ற மூன்று அணிகளை விடவும் கொல்கத்தா அணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் சாதகமான பிட்ச் இருக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே ராஜஸ்தான், பெங்களூரு அல்லது ஹைதராபாத் என மூன்று அணிகளில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சேப்பாக்கத்தின் பிட்ச்சை பயன்படுத்தி அந்த அணியை வீழ்த்தும் என கூறுகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது இருக்கும் நான்கு அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். மேலும், மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசி உள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு ஈடாக இருப்பது அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமே. அந்த அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் சாஹல் இடம் பெற்றுள்ளனர். ஒருவேளை ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் கொல்கத்தா அணிக்கு ஈடு கொடுத்து பந்து வீச வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த ஆண்டு சாஹல் மற்றும் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளில் சிறப்பாக செயல்படக் கூடிய சுழற் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கப் போகும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். அது மட்டும் நடந்து விட்டால் அந்த அணி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று விடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று இருந்தது. அந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பை வென்று இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து அதே சென்னை சேப்பாக்கத்தில் நடக்கப் போகும் இறுதிப் போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆட உள்ளது. அந்த வகையிலும் சென்னை சேப்பாக்கம் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.