சென்னை : சர்வதேச அணியின் கேப்டனாகவும், ஐபிஎல் அணியின் கேப்டனாகவும் தோனி செய்து இருந்த முக்கிய சாதனை ஒன்றை சமன் செய்யும் அரிய வாய்ப்பை பாட் கம்மின்ஸ் தவறவிட்டார்.
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து சேஸிங் செய்த கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 57 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பாட் கம்மின்ஸ் தோனியின் சாதனையை சமன் செய்ய கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார். சர்வதேச அணியின் கேப்டனாக ஐசிசி கோப்பை வென்று, அதே சமயம் ஐபிஎல் அணியின் கேப்டனாக ஐபிஎல் கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. அவர் இந்திய அணியின் கேப்டனாக 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். அதேபோல, ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார்.
இந்த சாதனையை வேறு எந்த ஒரு கேப்டனாலும் இதுவரை செய்ய முடியவில்லை. உதாரணத்திற்கு ரோஹித் சர்மா ஐபிஎல் அணியின் (மும்பை இந்தியன்ஸ்) கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார். ஆனால், இந்திய அணியின் கேப்டனாக அவரால் இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஐசிசி ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறிய போதும், அதில் தோல்வி அடைந்தது. அதனால் அந்த வாய்ப்பை ரோஹித் சர்மா தவற விட்டிருந்தார்.
அதேபோல பாட் கம்மின்ஸ் 2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையை ஆஸ்திரேலியாவின் கேப்டனாக வென்று இருந்தார். அவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியிடம், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததால் கம்மின்ஸ் அந்த வாய்ப்பை இழந்தார். இதை அடுத்து ஐசிசி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டார் தோனி.